Ariyalur District - Sri Balambika-Karkodeswarar Temple

அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் கார்க்கோடேஸ்வரர்
உற்சவர் -
அம்மன்/தாயார் பாலாம்பிகா
தல விருட்சம் -
தீர்த்தம் -
ஆகமம்/பூஜை -
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் காமரசவல்லி
மாவட்டம் அரியலூர்
மாநிலம் தமிழ்நாடு
தல சிறப்பு:
கடக ராசிக்காரர்கள் வணங்க ஏற்ற தலம் இது. சர்ப்பதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில், காமரசவல்லி, திருமானூர் அரியலூர்.
போன்:
+91 98677 92299, 96267 70804
பொது தகவல்:
இங்கு பெரிய விநாயகர், நந்திதேவர், ஈசனுக்குக் கார்க்கோடகன் பூஜை செய்த காட்சியை விளக்கும் சிற்பம், புராணத்தைச் சொல்கிறது. மண்டபத் தூண்கள் சிற்ப நயம் பேசுகின்றன. பிராகாரத்தில் தனிச் சந்நிதியில் ஸ்ரீவிநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான், துர்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் போன்ற தெய்வங்கள் அருள் பாலிக்கின்றன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர், பிரம்மன் ஆகிய திருமேனிகள் உள்ளன. மடப்பள்ளியும், நடராஜர் மண்டபமும் அமைந்துள்ளது. நாக தோஷம் போக்கும் தலம் என்பதால், சில நாகர் விக்கிரங்களையும் தரிசிக்கலாம்.
தல வரலாறு:
கிடைத்தற்கு அரிய பேரின்பத்தைப் பலரும் தேடி அலைந்த காலத்தில், சிற்றின்ப வேட்கையில் நாட்டம் கொண்டு அதிலேயே மூழ்கிக் கிடந்தவர்களும் இருந்தார்கள். காமம் அவர்களைப் படாத பாடு படுத்தியது. இதன் காரணமாக நித்தமும் தாங்கள் அனுஷ்டிக்க வேண்டிய வழிபாடுகளையும், நியதிகளையும் பலர் மறந்து போயினர். இத்தகைய காலத்தில் உலகத்தை நல்வழிப்படுத்த வேண்டியது சான்றோர்கள் கடமை அல்லவா? எனவே, தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று மக்களின் இந்த நிலையை மாற்றுமாறு வேண்டினார். இதனால்தான் காமன் என்கிற மன்மதன் ஈசனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்பட்டான் என்ற கதை நாம் அனைவரும் அறிந்ததே. தன் கணவன் மன்மதனை மீண்டும் உயிர்பித்துத் தருமாறு ஈசனை நோக்கி தவம் இருந்தாள் அவனது துணைவியான ரதிதேவி. காமனை அழித்து விட்டதால், இனப்பெருக்கம் அப்போது குறைந்து போனதாலும், தன்னை வழிபட்ட ரதிக்கு மாங்கல்ய பிச்சை தருவதற்காகவும் அவள் பார்வைக்கு மட்டும் தெரியுமாறு மன்மதனை உயிர்பித்துத் தந்தார் ஈசன். ரதிக்கு வரம் கொடுத்த ஊர் என்பதால் ரதிவரபுரம் என்றும் காமனின் தேவியான ரதி தவம் இருந்த தலம் என்பதால், காமரதிவல்லி எனவும் அழைக்கப்படலானது. இதுவே பின்னாளில் காமரசவல்லி ஆகி விட்டது.

ஊர்ப் பெயருக்கான இந்தக் கதை புராணத்தோடு நின்றுப்போய் விடவில்லை. இதை மெய்ப்பிக்கும் வகையில் ரதிதேவியின் செப்புத் திருமேனி ஒன்று இந்த ஆலயத்தில் உள்ளது. தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டி, இறைவனிடம் இரு கரங்களை ஏந்தி, மாங்கல்ய பிச்சை கேட்கும் கோலத்தில் காணப்படுகிறது இந்தத் திருமேனி. காமரசவல்லியில் ஒவ்வொரு மாசி மாதமும் பவுர்ணமி தினத்தன்று காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது இரண்டாக வெட்டிய ஆமணக்குச் செடியை ஆலயத்தில் நட்டு வைப்பார்கள். இறை பக்திக்கு உட்பட்டும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டும் இந்தக் கிளை எட்டே நாட்களுக்குள் மீண்டும் உயிர் பெற்று வளர்கிறது. ரதிதேவியின் வாழ்க்கை இங்கே துளிர்த்ததுபோல், இங்கே நடப்படுகிறவை மீண்டும் துளிர்க்கும் என்பதற்கு உதாரணம் இது.

பாண்டவர் வம்சத்தில் வந்த பரீட்சித்து மகாராஜாவை அறிவோம். இவன் அர்ஜுனனின் பேரன். அபிமன்யுவின் மகன். உத்திரையின் வயிற்றில் பரீட்சித்து இருந்தபோது மகாபாரத யுத்தம் நடந்தது. கருவிலேயே பரீட்சித்தை அழிக்க வேண்டும் என்பதற்காக அஸ்வத்தாமன் எய்த அஸ்திரத்தை ஸ்ரீமந் நாராயணன் காத்து அருளினார் என்பது புராணம். எனவே, பிறப்பதற்கு முன்னரே மாலவனின் அருள் பெற்றவர் பரீட்சித்து. கானகத்தில் வேட்டையாடச் சென்றபோது, ஒரு முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்யும் விதமாக அவரது கழுத்தில் இறந்த பாம்பு ஒன்றை எடுத்து மாலையாக அவரது கழுத்தில் போட்டார் பரீட்சித்து மகாராஜா. இதைக் கண்டு வெகுண்டான் முனிவரின் மகன். இன்றையில் இருந்து ஏழாம் நாள் இந்த மகாராஜா பாம்பு கடித்துச் சாவான் என்று சாபம் விட்டான். இந்த சாபத்தைத் தன் தவ வலிமையாலும், பிற ரிஷிகளின் மூலம் அறிந்து கொண்டாலும், இறப்பில் இருந்து பரீட்சித்தால் தப்ப முடியவில்லை. சரியாக ஏழாவது நாள் அன்று பாம்பு கடித்து இறந்தான். இவனைக் கடித்த பாம்பு கார்க்கோடகன் என்று தேவி பாகவதத்தின் ஒரு குறிப்பு உண்டு. கத்துருவின் புத்திரன்தான் கார்க்கோடகன். அஷ்டமாநாகங்களில் ஒருவன். நாகங்களுக்கெல்லாம் தலைவனாகப் போற்றப்படுபவன். யாரோ ஒரு முனி புத்திரனின் சாபத்தால் தன் தந்தை பாம்பு தீண்டி பலியானார் என்ற தகவல் அறிந்த பரிட்சித்துவின் புதல்வன் ஜனமேஜயன் கோபமடைந்தான். ஒரு விசேஷமான யாகம் நடத்தத் துவங்கினான். அக்னியை வளர்த்தான். அந்த யாக அக்னியில் பூலோகத்தில் உள்ள பாம்புகள் அத்தனையும் தீயில் விழுந்து பொசுங்கச் செய்தான். ஆயிரக்கணக்கான நாகங்கள் எங்கெங்கிருந்தோ வந்து யாகத் தீயில் விழுந்து பொசுங்கின. நாகங்களுக்கெல்லாம் அரசனான கார்க்கோடகன், தான் எப்படியும் இதில் இருந்து தப்ப வேண்டும் என்று சிந்தித்தான். மகாவிஷ்ணுவிடம் சென்றான். இந்த யாகத் தீயில் தான் பாதிக்கப்படாமல் இருக்க அருள் வேண்டும் என்று வரம் கேட்டான்.

அதற்கு மகாவிஷ்ணு சவுந்தரேஸ்வரர் அருள் பாலித்து வரும் திருத்தலம் ஒன்று உள்ளது. அங்கு உறையும் மகாதேவனை பூஜித்து வணங்கினால், நீயும் உன் குடும்பமும் காப்பாற்றப்படுவாய் என்று சொல்லி, காமரசவல்லி என்று இன்று அழைக்கப்படுகிற திருத்தலத்துக்குச் செல்லும் வழியைக் கூறினார். இதைக் கேட்ட மாத்திரத்தில் பூலோகத்தில் காமரசவல்லி திருத்தலத்துக்கு வந்து சவந்தரேஸ்வரரை பக்தியுடன் தொழுதான் கார்க்கோடகன். ஈசனும் அருளி, நீ சார்ந்த இனத்துக்கு இனி எந்த ஒரு ஆபத்தும் இருக்காது, தவிர இந்தத் திருத்தலத்தில் வசிக்கும் எவரையும் கால சர்ப்ப தோஷம் அணுகாது. அத்தகைய தோஷம் இருந்தால், அவர்கள் நலம் பெறுவர் என்று கார்க்கோடகனுக்கு அருளினார் சவுந்தரேஸ்வரர். இந்த நிகழ்வுக்குப் பிறகு சவுந்தரேஸ்வரர் கார்க்கோடேஸ்வரர் எனவும் அழைக்கப்படலானார். ஈசன் தந்த வாக்குப்படி அன்று முதல் இன்றுவரை கிராமமான காமரசவல்லியில் பாம்பு தீண்டி எவரும் பலியானதில்லை. இதை இங்குள்ள கல்வெட்டே உணர்த்துகிறது. இந்த வரத்தை ஈசனிடம் இருந்து கார்க்கோடகன் பெற்றது கடக ராசி, கடக லக்னம் அமைந்த தினத்தில், எனவே இந்த ராசி மற்றும் லக்ன அன்பர்கள் இங்கு வந்து தரிசிப்பது சிறப்பு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:
கடக ராசிக்காரர்கள் வணங்க ஏற்ற தலம் இது. சர்ப்பதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு.
Ref: http://temple.dinamalar.com/New.php?id=1703

No comments:

Post a Comment

Schools in Ariyalur district

1 Agathiyar Nursery & Primary School Udayarpalayam - Ariyalur (Dt) 2 Alpha ...